ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரம் திருட்டு
ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரம் திருடப்பட்டது
திருச்சி
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய செல்போனுக்கு வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என கடந்த 2-ந் தேதி குறுஞ்செய்தி மூலம் போலியான லிங்க் ஒன்று வந்தது. ராஜாராம் அந்த லிங்க்கை கிளிக் செய்தார். பின்னர் அவருடைய வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. எண் போன்ற விவரங்களை போலியான இணையதளத்தில் பதிவு செய்தார். சிலமணிநேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்து 999 திருடப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாராம், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் துரிதமாக செயல்பட்டு ராஜாராம் இழந்த ரூ.35 ஆயிரத்து 999-ஐ போலீசார் மீட்டு அவருடைய வங்கிக்கணக்கில் செலுத்தினர்.