தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
இளையான்குடி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
பங்குனி திருவிழா
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் காலையில் நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பொங்கல் விழா
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை படையல் செய்து வழிபாடு செய்வார்கள். மறுநாள் 6-ந்தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந்தேதி பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழா காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.