வணிகர்களுக்கு மாதந்தோறும் தனியாக கலந்தாய்வு கூட்டம் -பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
கலெக்டர் அலுவலகங்களில் வணிகர்களுக்கு மாதந்தோறும் தனியாக கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;
மானாமதுரை
கலெக்டர் அலுவலகங்களில் வணிகர்களுக்கு மாதந்தோறும் தனியாக கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல பொதுக்குழு கூட்டம் மானாமதுரையில் நடந்தது. மதுரை மண்டல தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட தலைவர் பாலகுருசாமி வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் மகேந்திரன் வாழ்த்திப் பேசினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற மே மாதம் 5-ந்தேதி திருச்சியில் நடைபெறும் 39-வது வணிகர் தின மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனால் மதுரை மண்டலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்பது என்றும், உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான வாடகையை முறைப்படுத்தி அறிவித்து அதனடிப்படையில் வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வணிகர்களுக்கு என தனியாக மாதம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரணி
பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மானாமதுரை அண்ணா சிலையில் இருந்து மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான வணிகர்கள் பேரணியாக நடந்து சென்றனர். இடையில் ஆங்காங்கே வணிகர் சங்க கொடிகளை நிர்வாகிகள் ஏற்றி வைத்தனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெகதீசன், கோவிந்தராஜ், ஜீவானந்தம், வீரபத்திரன், அழகேசன், சாதிக் அலி, சைமன் அன்னராஜ், திருமுருகன், ஆல்பின் சகாயராஜ், பாண்டியன், லட்சுமணன், பாண்டியன், பெத்துராஜ், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.