பொதுமக்கள் சாலை மறியல்
சாத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே அமீர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அனைவருக்கும் பொதுவாக ஒரே ஒரு சுடுகாடு மட்டுமே இருந்து வருகிறது. சுடுகாட்டிற்கு செல்லும் வழியானது மிகவும் குறுகலாகவும், சரியாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இ்ந்தநிலையில் நேற்று ஒரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அந்த வழியாக கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் இரு வீட்டினர், ஊர்வலத்தில் சென்ற ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தூர் - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.