குமரியில் இலவங்காய் சீசன் தொடங்கியது
குமரி மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்பு பகுதிகளில் இலவங்காய் அறுவடை தொடங்கியுள்ளது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்பு பகுதிகளில் இலவங்காய் அறுவடை தொடங்கியுள்ளது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இலவம் பஞ்சு
இலவம் பஞ்சில் துயில் என்பது முதுமொழி. மனிதர்களின் ஓய்விற்கும், நிம்மதியான தூக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் மெத்தை மற்றும் தலையணைகள் தயாரிக்கப்படுகிறது.
மேலும், தண்ணீரில் மிதக்கும் உயிர் காக்கும் உறைகள் எனப்படும் லைப் ஜாக்கெட்டுகள், குளிர்ப் பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவத்தினருக்கான பாதுகாப்பு ஆடைகள் தயாரிக்க பயன்படும் பஞ்சுகளில் முதலிடம் பிடிப்பது இலவம் பஞ்சுதான். இலவம் பஞ்சுகள், இலவம் மரத்தின் காய்களில் இருந்து கிடைக்கிறது.
காற்றினால் பரவல்
மரங்கள், செடிகள், கொடிகளின் விதைகளை பறவைகள் உண்டு அதன் எச்சங்கள் மூலம் மீண்டும் உயிர்பெருகின்றன. ஆனால், இலவ மரம் தனது விதைகளை பஞ்சுகளில் இணைத்து பரவலாக்குவது சற்று வினோதமானது.
ஆம், இலவம் மரத்தில் காய்கள் முதிர்ந்து வெடித்து காற்றின் வழியாக பஞ்சுகள் பறக்கும்போது, அதனுடன் இணைந்திருக்கும் விதைகளும் பறந்து கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று விழுந்து முளைக்கின்றது.
இந்திய அளவில் மிகப்பெரிய இலவங்காய் சந்தை தமிழகத்தில் தேனி மாவட்டம் போடியில் உள்ளது. இங்கு ஏராளமான மெத்தை, தலையணை ஆலைகள் உள்பட பஞ்சு சார்ந்த பொருள்கள் தயாரிக்கும் ஆலைகள் ஏராளமாக உள்ளன.
குமரியில்...
தேனி மாவட்டத்திற்கு அடுத்த படியாக தமிழகத்தில் பேச்சிப்பாறையை மையமாகக் கொண்ட பழங்குடி கிராமங்களான மோதிரமலை, மூக்கறைக்கல், கோலிஞ்சிமடம், மணலோடை, புறாவிளை, வலியமலை, காயக்கரை, வில்லுசாரிமலை, கூவைக்காடு, ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம் வயல் உள்ளிட்ட மலை கிராமங்களில் இலவ மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன.
தற்போது நவீன குட்டை ஒட்டு ரக இலவ மரங்கள் நடவுக்கு கிடைக்கின்றன. இந்த வகை இலவ மரங்களில் அதிக காய்களுடன் நீளமாக காய்க்கின்றன.
மார்ச், ஏப்ரலில் சீசன்
இலவு மரங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்கள் சீசன் காலமாகும். இந்த மரங்களில் சீசன் காலங்களில் காய்களை பறித்து விற்பனை செய்வதன் மூலம் பழங்குடி மக்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் 90 சதவீத காய்கள் போடிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக போடி வியாபாரிகள் குலசேகரத்தில் முகாமிட்டு கொள்முதல் செய்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வணிகம் நடைபெறுகிறது.
குறைவான விலை
இதுகுறித்து கடையால் பேரூராட்சி கவுன்சிலரான மோதிரமலையைச் சேர்ந்த ரெகுகாணி கூறுகையில், தற்போது மரங்களில் ஏறி காய்களை பறிப்பதற்கும், காய்களை எடுத்துச் செல்வதற்கும் அதிக செலவுகள் ஏற்படுகிறது. ஆனால், ஒரு காய்க்கு ரூ.1 என்பது மிக்குறைந்த விலையாக உள்ளது. இதனால் பலர் காய்களை பறிக்காமல் விட்டு விடும் நிலை உள்ளது.
தற்போது குறைவான அளவிலேயே இலவ மரங்கள் உள்ளன. இலவம் பஞ்சுகளில் தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை உள்ளிட்டப் பொருள்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காதவை என்பதால், இலவ நடவை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்பதுடன், இலவங்காய்களுக்கு நியாமான விலை கிடைக்க வேண்டும் என்பதும் காலத்தின் அவசியமாகும் என்றார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி
குலசேகரத்தில் உள்ள போடியைச் சேர்ந்த வியாபாரி சிவராஜ் கூறுகையில்,
இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலவம் பஞ்சு மற்றும் செயற்கை பஞ்சுகள் குறைந்த விலையில் இறக்குமதியாவதால் மெத்தை, தலையணை ஆலைகள் குறைந்த விலையில் இலவங்காய்களை கொள்முதல் செய்கின்றன. காய் அறுவடை தீவிரமாகும் போது விலை மேலும் சரிவடையவே வாய்ப்புகள் உள்ளன. இலவங்காய்களிலிருந்து பஞ்சுகள் மட்டுமின்றி அவற்றின் விதைகள், காய்களின் மையப் பகுதியில் இருக்கும் கோதுகள், தோடுகள் என அனைத்தும் பயன்படக்கூடியவை. விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகின்றது என்றார்.