ஜோலார்பேட்டை வனப்பகுதியில் மீண்டும் தீவைத்த மர்ம நபர்கள்
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையில் மீண்டும் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்ததால் அரியவகை மரங்கள் மூலிகைச் செடி கொடிகள் நேற்று எரிந்து நாசமானது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையில் மீண்டும் மர்ம நபர்கள் காட்டுக்கு தீ வைத்ததால் அரியவகை மரங்கள் மூலிகைச் செடி கொடிகள் நேற்று எரிந்து நாசமானது. மேலும் தீ விபத்தால் வாகன ஓட்டிகள் மலை சாலையில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
தீவைப்பு
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி மலையடிவாரத்தில் நேற்று சமூக விரோதிகள் காட்டுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு தீ எரிந்து சென்றது. இந்த தீயால் மலை மீது இருந்த அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகளும், கொடிகளும் எரிந்து நாசமானது. காட்டில் வசிக்கும் முயல் மயில் மான் பாம்புகள் உள்ளிட்டவைகள் தீக்கு இரையாகின.
மலை சாலையில் புகைமண்டலம் ஏற்பட்டதோடு அந்த வழியாக சென்றவர்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகினர்.
தொடர் சம்பவங்கள்
மேலும் தினமும் மர்ம நபர்கள் மலையடிவாரத்திற்கு சென்று மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதும், புகைப்பிடித்துவிட்டு சிகரெட், பீடியை அணைக்காமல் வனப்பகுதிக்குள் வீசுவதாலும் சருகுகள் தீப்பிடித்து மரம் செடி கொடிகள் எரிந்து நாசமாகிறது.
எனவே இது போன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களை வனத்துறையினர் அவ்வப்போது கண்காணித்தால் மலையடிவாரத்திற்கு வந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயலில் ஈடுபடுவது தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் காட்டுப் பகுதியில் இருக்கும் அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் போன்றவைகள் எரிந்து நாசமாவதிலிருந்து தடுத்து காப்பாற்ற முடியும்.
நடவடிக்கை அவசியம்
மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அடிக்கடி இதுபோன்ற சம்பவம் அதிக அளவில் நடைபெறும். எனவே கோடை காலத்திற்கு குளிர்ச்சியை நோக்கி ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்மநபர்கள் வைக்கும் தீயால் சுற்றுலாத்தளம் வெப்ப தலமாக மாறும் நிலை உருவாவதை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.