நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 100 மனுக்கள் மீது நடவடிக்கை - கோவி.செழியன் தகவல்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு விசாரணை நடத்தி 100 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் தலைவர் கோவி.செழியன் தெரிவித்தார்.

Update: 2022-03-09 19:35 GMT
நெல்லை:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் தலைவராக திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் உள்ளார். இதில் உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி (வால்பாறை), சங்கர் (திருவெற்றியூர்), மதியழகன் (பர்கூர்), கிரி (செங்கம்), சந்திரன் (திருத்தணி), மாங்குடி (காரைக்குடி), பிரபாகரராஜா (விருகம்பாக்கம்) ஆகியோர் உள்ளனர்.

பொதுமக்கள் அடிப்படை தேவைகள் சம்பந்தமாக கொடுக்கின்ற மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் மாவட்டந்தோறும் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் சாந்தி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்து பேசினார்கள்.

கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களில் 74 மனுக்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மனு கொடுத்தவர்கள் மனுவின் விவரம் குறித்து கூறினார்கள். தொடர்ந்து அதிகாரிகள் பதில் அளித்தனர். அதிகாரிகள் தெரிவித்த பதிலில் திருப்தி இல்லாததால் பல அதிகாரிகளை அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் கோவி.செழியன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.

நெல்லை கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது என்று வக்கீல்கள் சங்க தலைவர் சிவ சூரியநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவை விசாரித்த குழுவினர், கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சேம்பரை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொதுமக்கள் கொடுத்த மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏற்கனவே பொதுமக்கள் கொடுத்த 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நாங்கள் ஆய்வு செய்து 100 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் சரி செய்யவும், சமுதாய நல கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிரச்சினை சார்ந்த மனுக்கள் என்பதால் இந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள், சமுதாயக்கூடம், கழிப்பறை கட்டிடம் ஆகியவை கட்ட குழு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 74 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 62 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள மனுக்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகளின் வசதிக்காக பள்ளிக்கூடத்தில் கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள் மற்றும் பழைய கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் ரூ.1 கோடி மதிப்பீடு கட்டப்பட்டு வரும் கூடுதல் கழிப்பறை கட்டிடங்களையும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை வேய்ந்தான்குளம், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் கழிவுகளை தரம் பிரித்து குப்பைகள் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்