கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கொடியேற்றம்
பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, வேத மந்திரங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தை முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.
தோகை விரித்தாடிய மயில்
முன்னதாக கொளஞ்சியப்பர் கோவிலில் கொடி ஏற்றப்படும்போது அங்கிருந்த மயில் தனது தோகையை விரித்தாடியது. இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினா். விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதில் வருகிற 17-ந் தேதி தேரோட்டமும், 18-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.