நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2¼ லட்சம் கொள்ளை
வேப்பந்தட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேப்பந்தட்டை,
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 50), நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்த பீரோவை திறந்துள்ளனர்.
இதில், சத்தம் கேட்டு ராஜாவின் மகன் அக்சய்வாசன் (18) எழுந்து பார்த்து சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்றனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதையடுத்து, அவர்களை பிடிக்க அக்சய்வாசன் முயன்றபோது அவரது இடது கையில் கத்தியால் கீறி விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.