அரசு விதிைய மீறி இயங்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.;
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
மணலிக்கரை வருக்கப்பிலாவிளை பகுதியை சேர்ந்த கெல்வின் சாஜூ என்பவர் தலைமையில் மேக்கோடு, சுருளகோடு, வேளிமலை, பொன்மனை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திருவட்டார், கல்குளம் தாலுகாக்களுக்கு உட்பட்ட மேக்கோடு, பொன்மனை, சுருளக்கோடு, வேளிமலை கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் தொடர் மலைகளும் உள்ளன. இந்த மலை பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் லட்சக்கணக்கான உழைக்கும் ஏழை மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், நீராதாரங்களும் உள்ளன. மேலும் இந்த பகுதிகள் சூழியல் அதிர்வு தாங்கு பகுதி மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டதாகும்.
நடவடிக்கை
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையானது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. இது இயற்கை வளம் நிறைந்த பகுதியாகும். அரசு இந்த மலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் பல்வேறு அரசாணைகளையும் நிறைவேற்றி உள்ளது. மலைகளை உடைக்கக்கூடாது என்ற கோர்ட்டு உத்தரவுகளும் நிலுவையில் உள்ளன.
ஆனால் மேக்கோடு, வேளிமலை, சுருளக்கோடு, பொன்மனை கிராம ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசாணை மற்றும் கோர்ட்டு உத்தரவுகளை மீறி கல்குவாரிகள் இயங்குகின்றன. அவற்றை தடுக்கவும், உடைக்கப்பட்ட மலைகளை அளவீடு செய்து அரசு விதிகளை மீறி இயங்கிய குவாரிகள் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக பாரம் ஏற்றி வெளிமாநிலத்துக்கு கடத்திச் செல்லும் டாரஸ் லாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடுகள் பெற்று இந்த பகுதிகளின் இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.