லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசுகள் வந்துள்ளதாக வாலிபரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசுகள் வந்துள்ளதாக வாலிபரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசுகள் வந்துள்ளதாக வாலிபரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முகநூலில் அறிமுகம்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தாவீத்(வயது 32). தேவாலய ஊழியரான இவருக்கு முகநூலில் லண்டனை சேர்ந்த ஸ்ரீபன் ஹென்றி என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது தாவீத் தனது குடும்பம் பற்றி தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்ப கஷ்டத்தை தெரிவித்தபோது அவருக்கு உதவி செய்வதாக ஹென்றி கூறியுள்ளார். மேலும் அவருக்கு பரிசுப் பொருட்களுடன் கூடிய பெட்டியை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
அதனை இந்திய நாட்டின் வரியை கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு தாவீத் சம்மதித்த நிலையில், 2 நாட்கள் கழித்து லால்நுன்கிமி என்ற பெண் தாவீத்தை செல்போனில் அழைத்து டெல்லி சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்து, பரிசுகளுடன் கூடிய பெட்டி வந்துள்ளதாகவும், அதனை ரூ.20 ஆயிரம் வரி செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
விலை மதிப்புமிக்க பொருள்
தாவீத் அந்த தொகையை அனுப்பிய நிலையில் மீண்டும் ரூ.18 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளதால் அதனையும் செலுத்தினார். இதன்பின்னர் அந்த பெண் மீண்டும் தொடர்பு கொண்டு, விலை மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வந்துள்ளன. எனவே அதனை பெற மேலும் ரூ.1 லட்சம் செலுத்துமாறும் இல்லாவிட்டால் அதனை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளார்.
தனது நண்பர் தனக்காக விலை மதிப்புமிக்க பரிசை அனுப்பி உள்ளாரே என்று மகிழ்ந்த தாவீத் ரூ.75 ஆயிரத்து 900 செலுத்தினார். இந்த பணம் சென்றடைந்த நிலையில் மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு மத்திய அரசு வரியை உயர்த்தி விட்டதால் மேலும், ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதிக பணம் செலுத்தி விட்டதால் எப்படியாவது பரிசுப்பட்டியை பெற்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தாவீத் ரூ.80 ஆயிரம் செலுத்தி உள்ளார். இதன் பின்னரும் லண்டனில் இருந்து வந்த பரிசுப்பெட்டி வைத்திருந்த அறை வாடகை, பாதுகாவலர்களின் சம்பளம், விமான டிக்கெட் செலவு சேர்த்து இன்னும் ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் ரூ.90 ஆயிரம் செலுத்திய நிலையில் பரிசுப்பெட்டி மட்டும் வரவில்லை.
போலீசில் புகார்
மொத்தமாக ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 900 செலுத்திய நிலையில் பரிசுகள் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்த தாவீத் அந்த பெண்ணையும், தனது நண்பரையும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாவீத், இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் வழக்குப்பதிவு செய்து, இந்த மோசடி குறித்து விசாரித்து வருகிறார்.