மீண்டும் மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி சாவு
தண்டராம்பட்டு அருகே மீண்டும் மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி இறந்தது.;
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள ராதாபுரம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து அடுத்தடுத்து 2 கன்றுக்குட்டிகள் பலியானது.
இந்த நிலையில் ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த மதர்ஷா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டிகளை நேற்று முன்தினம் கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.
நேற்று அதிகாலை பார்த்த போது அதில் ஒரு கன்றுக்குட்டி மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இரண்டு குட்டிகள் ஆபத்தான நிலையில் இருந்தன.
இவரது பக்கத்து நிலத்துக்காரரான காதர் அலி என்பவருக்கு சொந்தமான ஒரு கன்று குட்டியையும் மர்ம விலங்கு கடித்து படுகாயமடைந்து இருந்தது.
தகவல் அறிந்ததும் கால்நடை மருத்துவர் லட்சுமி பிரியா, வனவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
மேலும் கன்று குட்டியை கடித்த இடத்தில் இருந்த எச்சங்களை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்குவதோடு வனத்துறை சார்பில் இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மர்ம விலங்கு எது என்று கண்டுபிடிப்பதற்கு குறிப்பிட்ட இடங்களில் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.