தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.பங்கேற்கிறார்

அம்மூரில் வருகிற 12-ந் தேததி தனியார் துறை சார்பில் நடக்கும் வேலைவாயய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.பங்கேற்க உள்ளதாக முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

Update: 2022-03-09 19:07 GMT
ராணிப்பேட்டை

அம்மூரில் வருகிற 12-ந் தேததி தனியார் துறை சார்பில் நடக்கும் வேலைவாயய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.பங்கேற்க உள்ளதாக முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஜி.கே. உலகப் பள்ளியில் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் சென்று ஏற்பாடுகளை விளக்கி கூறினார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

அதனடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜி.கே.உலக பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த வேலை வாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

பங்கேற்கலாம்

சுமார் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுபவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 8-ம் வகுப்பு முதல் பொறியியல், கலை, அறிவியல் பட்டபடிப்பு மற்றும் பட்டயப் படிப்பு வரை படித்துள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு முகாமுக்கு வரும் அனைவருக்கும் தேவையான தண்ணீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, தாய்மார்கள் யாரேனும் வந்தால் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 90 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது. இந்த தொழில் பயிற்சி நிலையங்களை மேம்படுத்திட தலா ரூ.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு தொழில் பயிற்சி நிலங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எந்திரங்கள் புதிய தொழில் பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ெதாழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு

அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மாணவ மாணவிகளின் தொழிற்கல்வி குறித்து நேரடியாக கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, இணை இயக்குனர்கள் அனிதா, ராஜசேகர், ஜெகதீசன், ஜி.கே.உலகப் பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்