பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெரு விழா
மயிலாடுதுறை அருகே மூவலூர் மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்க சகாயசாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே மூவலூர் மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்க சகாயசாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
மார்க்க சகாயசாமி கோவில்
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்க சகாயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இறைவனை சவுந்தரநாயகி அம்மன் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும், துர்கா பரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சாமியை வழிபட்டு அகோர வடிவில் இருந்து சவுந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும், வழித்துணை நாதருக்கு இதய நோய் தீர்த்த தலமாகவும், பிப்பல மகரிஷி முக்தி அடைந்த தலமாகவும் இது விளங்கி வருகிறது.
பிரம்மோற்சவ பெருவிழா
மேலும் இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாயசாமியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தலமாகவும் இது விளங்கி வருகிறது. இந்தகோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு நேற்று யாகசாலையில் சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தில் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷப கொடி ஏற்றப்பட்டது.
17-ந் தேதி தேரோட்டம்
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய விழாக்களாக வருகிற 13 -ந் தேதி சப்பரம், 15-ந் தேதி திருக்கல்யாணம், 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஞானசுந்தரம், தக்கார் உத்திராபதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர். இதில் மயிலாடுதுறை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூவலூர் மூர்த்தி மற்றும் மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.