மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா
மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடந்தது.
கீரமங்கலம்:
முளைப்பாரி திருவிழா
கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதுடன் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள் உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை, தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் கிராமமக்கள் நேற்று மதியம் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடலில் ஒன்று சேர்ந்து கல்லணை கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர்.
மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மது எடுப்பு திருவிழா
வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவின் தொடர்ச்சியாக தினசரி சிறப்பு வழிபாடுகளுடன் வாணவேடிக்கை, மங்கள இசை முழங்க அம்மன் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் கிராம மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நேற்று மாலை மது எடுப்பு திருவிழா நடந்தது. மது எடுப்பு திருவிழாவில் மேற்பனைக்காடு கிராமமக்கள் தென்னம்பாலைகளை நெல் நிரப்பிய குடங்களில் வைத்து மலர்களால் அலங்கரித்து கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித்திடலைச் சுற்றி ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோவில் அருகே போட்டுவிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர். இதில் மேற்பனைக்காடு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.