கோடாலிகுடி கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
கோடாலிகுடி கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை:
சாலை மறியல்
விராலிமலையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் கோடாலிகுடி கிராமம் உள்ளது. இங்கிருந்து செரளப்பட்டி, மஞ்சினிபட்டி, இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலையானது மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை விராலிமலை-மணப்பாறை சாலையில் கற்கள், கட்டைகளை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கல்லூரி பஸ்கள் என அனைத்து வாகனங்களும் வெகுதூரம் வரை நீண்ட வரிசையில் சாலையில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அங்கு வந்த வட்டார வளர்ச்சி துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வருகிற 16-ந் தேதி நம்பம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் கோடாலிகுடி பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக, வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி தலைமையில் கூட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.