நாமக்கல்லில் சொத்து வரி செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு-நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
நாமக்கல்லில் சொத்து வரி செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் நகராட்சிக்கு 2021-2022-ம் நிதியாண்டு வரை செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் உரிமக்கட்டணம் உள்ளிட்ட வரி மற்றும் கட்டண நிலுவை, நடப்பு தொகையை இதுவரை செலுத்தாதவர்கள் நாமக்கல் நகராட்சி அலுவலக கணினி வசூல் மையங்கள், மோகனூர் சாலை கணினி வசூல் மையம் மற்றும் கோட்டை சாலையில் உள்ள தாய்சேய் நலவிடுதியில் உள்ள கணினி வசூல் மையத்தில் உடனடியாக செலுத்த வேண்டும்.
வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், சட்ட பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் செயல்படும். இணையதளம் மூலமும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி நாமக்கல் நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை குறைவின்றி வழங்க நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.