உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரணாம்பட்டு மாணவர் கோரிக்கை

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரணாம்பட்டு மாணவர் கூறினார்.

Update: 2022-03-09 18:18 GMT
பேரணாம்பட்டு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரணாம்பட்டு மாணவர் கூறினார்.

பேரணாம்பட்டு மாணவர்கள்

பேரணாம்பட்டு டவுன் தாதாவீதியை சேர்ந்த சையத் அப்ரார் என்பவரின் மகன் சையத் அக்யார் அஹம்மத் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரத்தில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இதே போன்று பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் ஊராட்சி புத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் சக்திவேல் (21) என்பவரும் உக்ரைன் நாட்டிலுள்ள மிக்கல் லைவ் நகரில் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் மாணவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர்.
உக்ரைனில் இருந்து வந்தது குறித்து மாணவர் அக்யார் அஹம்மத் கூறியதாவது:-

பதுங்கு குழியில்

போர் காரணமாக கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் சுமார் 800 பேருடன் சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு தங்கியிருந்தோம். எங்களுடன் தங்கியிருந்த டெல்லியை சேர்ந்த 2 நண்பர்கள் போர் தொடங்கிய 4-வது நாளே போலந்து நாட்டின் எல்லைக்கு சென்றனர். எங்களுக்கு எப்படி செல்வது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.
உயிர் தப்பிப்பதற்காக கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி சக மாணவ- மாணவிகள் 8 பேருடன் வாடகை கார் மூலம் அதிக பணம் கொடுத்து உக்ரைன் நாட்டின் வோக்சால் ரெயில் நிலையத்தை அடைந்தோம். அங்கு ரெயிலில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை மட்டும் ஏற்றினர். மாணவர்களை ஏற்ற மறுத்தனர். எங்களை பாகுபாடு பார்த்தனர். கையாலும், காலாலும் தாக்கினர். ரெயிலில் பயணம் செய்ய ஒவ்வொருவரும் இந்திய பணம் ரூ.1,000 கொடுத்து 1,350 கி.மீ பயணம் செய்து போலந்து அருகிலுள்ள லிவிவ் நகருக்கு சென்றடைந்தோம். 

அடித்தார்கள்

போலந்து எல்லையில் அடிப்பதாக தெரிய வந்தது. அதனால் ஸ்லோவாக்கியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தோம். அங்கு செல்ல அனுமதியும், பாதுகாப்பும் இல்லை. ஆனாலும் 8 பேரும் கடும் குளிரில் எல்லையை தாண்டியபோது இந்திய தேசிய கொடியுடன் இந்திய மாணவர்கள் செல்ல பஸ் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதை பார்த்து எங்களுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அதில் ஏறி அண்டை நாடான ருமேனியாவிற்கு சென்றடைந்தோம்.

3 நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் கடந்த 5-ந் தேதி டெல்லி வந்தடைந்தோம். அங்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த தமிழ் நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நாங்கள் பின்னர் ஊருக்கு வந்து சேர்ந்தோம். 

தமிழகத்தில் படிக்க

எங்களை பாதுகாப்பாக மீட்ட இந்தியபிரதமர் மோடி, பரிந்துரை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக மாணவர்கள் தொடர்ந்து இங்கேயே படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தாய் முகத்தை பார்க்க முடியவில்லை

மாணவர் சக்திவேல் கூறுகையில் போர் தொடங்கிய போது விடுதி அருகே உள்ள பாதுகாப்பான பதுங்கு குழியில் 3 நாட்கள் சிரமப்பட்டு தங்கியிருந்த போது சுமார் 200, 300 மீட்டர் தூரத்தில் குண்டு மழை பொழிந்தது மற்றும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. போர் நடந்த பகுதியில் நான் சிக்கி தவித்ததை கேள்விப்பட்ட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் சசிகலா (53) மிகவும் மன வேதனை அடைந்து மயங்கி விழுந்து இறந்தார். இந்த நேரத்தில் இறந்த எனது தாயின் முகத்தை கூட கடைசியாக பார்க்க முடியாமல் மிகவும் சோகத்திற்கு ஆளானேன். 
உக்ரைனிலிருந்து பஸ் மூலம் மால்டோவா எல்லையை அடைந்து. அங்கிருந்து இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டு ருமேனியா நாட்டை அடைந்து அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து பின்னர் இந்தியாவிற்கு மும்பையை வந்தடைந்தேன். அங்கிருந்து 6-ந் தேதி தமிழகம் திரும்பினேன் என்றார்.

மேலும் செய்திகள்