தனியார் நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் நிலங்களுக்கான பத்திரங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கொல்லிமலையில் தனியார் நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் நிலங்களுக்கான பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-09 18:18 GMT
நாமக்கல்:
ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு, வாழவந்திநாடு, தேவானூர்நாடு பகுதிகளில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வரும் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சட்டவிரோதமாக தனியார் நிறுவனம் பதிவு செய்துள்ள பழங்குடியின மக்களின் நிலங்களுக்கான பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பழங்குடியின மக்களின் நிலங்களை போலி பத்திரம் மூலம் தனியார் நிறுவனத்துக்கு பதிவு செய்த அரசு துறை அலுவலர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார்.
சாதி சான்றிதழ்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழங்குடியின மக்கள் பயிர் செய்து வரும் நிலங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள நிபந்தனை பட்டாக்களை (கண்டிசன் பட்டா) மாற்றி வழங்க வேண்டும். கொல்லிமலையில் சாதி சான்றிதழ் இல்லாமல் இனி எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என சார்பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
பழங்குடியின மக்கள் பயிர் செய்கிற புறம்போக்கு நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிலத்தை வாங்க முடியாது
பின்னர் மாநில அமைப்பாளர் ரெங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது :-
கொல்லிமலையில் சுமார் 6,404 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும், இந்த நிலங்களை ஏலத்தில் விட போவதாகவும் இணையதளம் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கொல்லிமலை பழங்குடியின மக்களின் நிலங்களை வேறு யாரும் வாங்க முடியாது என கவர்னர் உத்தரவு உள்ளது. மேலும் சட்டங்கள் பல இருந்தும் பழங்குடியின மக்கள் நிலங்கள் மோசடியாக தனியார் நிறுவனம் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்