மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை காலத்தை நீட்டிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோகனூர்:
மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகாவிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான அரவை பருவம் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ஆலை அரவை செய்ய வேண்டிய கரும்பு 38 ஆயிரம் டன் நிலுவையில் உள்ளது. கரும்பு வெட்டுக்கூலி டன் ஒன்றுக்கு, ரூ.1,400-ஐ தாண்டி உள்ளது. இந்தநிலையில் நிலுவையில் உள்ள 38 ஆயிரம் டன்கள் கரும்பு முழுவதையும், நமது ஆலையில் அரவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிலுவையில் உள்ள கரும்பை வெளி ஆலைகளுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதாவது, வெளி ஆலைகளுக்கு வெட்டி அனுப்ப தேவையான தொழிலாளர்கள் கிடைக்கமாட்டார்கள். தற்போதைய வெட்டுக்கூலியைவிட கூடுதலாக செலவு ஏற்படும். லாரி கட்டணமும் அதிகமாக கொடுக்கும் நிலை ஏற்படும். இதனால் கரும்பு காய்ந்து, விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, எந்த சூழ்நிலையிலும் பதிவு செய்த கரும்புகள் அனைத்தையும் அரவை செய்யாமல் நிறுத்தக்கூடாது. மேலும், அரவை காலத்தை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.