மாவட்டத்தில் 45 இடங்களில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் 45 இடங்களில் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-03-09 18:17 GMT
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு தலா 3 முகாம்கள் வீதம் மொத்தம் 45 முகாம்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, ராசிபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 14-ந் தேதியும், பட்டணம் முனியப்பம்பாளையம் கணபதி விலாஸ் நடுநிலைப்பள்ளியில் 17-ந் தேதியும் நடைபெற உள்ளது.
ஆலோசனை
முகாமில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், இதய நோய்கள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவ சிகிச்சை சிறப்பான டாக்டர்களால் அளிக்கப்படுகிறது. 
கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.
காப்பீட்டு திட்டம்
இந்த முகாமில் தனியார் மருத்துவமனைகளிலிருந்து டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிறந்த சிகிச்சை பெற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேல் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உயர் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்யபப்படும். 
எனவே, பொதுமக்கள் அனைவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்