மின்சாரம் தாக்கியதில் மாடியில் இருந்து விழுந்து மெக்கானிக் பலி
மின்சாரம் தாக்கியதில் மாடியில் இருந்து விழுந்து மெக்கானிக் பலியானார்.
வேலூர்
வேலூர் கஸ்பா டோனல் தெருவை சேர்ந்தவர் சைமன் (வயது 36), ஏ.சி.மெக்கானிக். இவர் 2 மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தார். தனது வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். எனவே வீட்டில் இருந்த பொருட்களை மாற்றும் பணியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் ஏ.சி. மெஷினை கழற்றுவதற்காக மொட்டைமாடியில் ஏ.சி.க்கு செல்லும் வயர்களை அப்புறப்படுத்தும்போது வீட்டின் அருகே தெருவில் இருந்த மின் வயரில், ஏ.சி. வயர் திடீரென உரசியது. அதில் மின்சாரம் பாய்ந்து சைமன் தூக்கி வீசப்பட்டார். மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது அண்ணன் ஜேம்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.