ஆற்றின் கரையோர வீடுகளை காலி செய்ய பொதுமக்கள் மறுப்பு
அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம், வீடுகட்ட நிலம் வேண்டும் எனக்கூறி நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்ய பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம், வீடுகட்ட நிலம் வேண்டும் எனக்கூறி நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்ய பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு
அரசு சார்பில் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டுக்குட்பட்ட காசிபாளையம் அருகே நொய்யல் ஆற்றோரம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேல் 37 வீடுகளில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நொய்யல் ஆறு நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருபவர்களை காலி செய்ய வலியுறுத்தியும் அதிகாரிகள் கூறிவந்தனர். மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் வீரபாண்டி, அய்யம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அரசு சலுகையில் ஒரு வீட்டிற்கு ரூ.1லட்சத்து 92 ஆயிரத்தை தவணை முறையில் செலுத்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 22 பேருக்கு வீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டு 5 பேர் பணம் செலுத்தி வருகின்றனர்.
நோட்டீஸ்
புறம்போக்கு இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருபவர்களை காலி செய்து மாற்று இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் கடந்த 2-ந்தேதி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில் 8-ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது. 9-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நீர்வளத்துறை உதவி பொறியாளர், கால்வாய் பிரிவு ஆதிகாரி மூலம் அறிவிப்பு விடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் காலி செய்யவில்லை இதனால் நேற்று காலை அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்கள், பொக்லை எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:-
வீடு கட்ட மாற்று இடம்
கடந்த 38 வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். நல்லூர் நகராட்சியாக இருக்கும்போதும் வரிகட்டியுள்ளோம், மாநகராட்சியான பின்னரும் வரி செலுத்தியுள்ளோம், மின்சாரம், குடிநீர் வரி செலுத்துகிறோம். இப்போது ஆற்று புறம்போக்கு இடம் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் வயதானவர்கள் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எங்களுக்கு அரசு வீடுகள் கட்ட மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்த தெற்கு துணை போலீஸ் கமிஷனர் ரவி, நல்லூர், வீரபாண்டி உதவி போலீஸ் கமிஷனர் லட்சுமணக்குமார், நல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வருகிற 24-ந்தேதி வரை கால அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் பொதுமக்கள் மாற்று இடம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சமாதானமான பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.