நீர்நிலைகளில் ஆண்டிற்கு 9 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்யலாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆண்டிற்கு 9 ஆயிரம் டன் மீன்கள் உற்பத்தி செய்யலாம் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.;

Update: 2022-03-09 17:43 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆண்டிற்கு 9 ஆயிரம் டன் மீன்கள் உற்பத்தி செய்யலாம் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாசன குளங்களில் ரூ..3 கோடியே 12 லட்சம் மதிப்பில் மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றுமு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 50 பயனாளிகளுக்கு கண்ணாடி நாரிழை பரிசல்கள், 10 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அணை பகுதியில் தாய் மீன், மீன் முட்டை, மீன் குஞ்சுகள் உற்பத்தி மற்றும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
9 ஆயிரம் டன் மீன் உற்பத்தி
பாசன குளங்களில் மிதவை கூண்டில் மீன்வளர்ப்பு திட்டத்தின் மூலம் 52 மீனவ கூட்டுறவு சங்கத்தினர் நேரடியாக பயன்பெற உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 200 டன் மீன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீன் தீவனம், மீன்குஞ்சுகள் ஆகியவற்றை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மீன்வளர்ப்பு மூலம் மொத்த வருவாய் ஆண்டொன்றிற்கு ரூ.1 கோடியே 80 லட்சம் வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வருவாயில் அரசுக்கு 50 சதவீதமும், பயனாளிக்கு 50 சதவீதமும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் 5 நீர்த்தேக்கம், 876 ஏரிகள் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர்நிலைகளில் ஆண்டிற்கு 9 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே, மீனவர்கள், மீன் வளர்க்கும் விவசாயிகள் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பயன்படுத்தி மீன் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையும் வகையில் அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பொறுப்பு) பாலகுரு, முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தாசில்தார்கள் இளங்கோ, சரவணன், தி.மு.க. நிர்வாகிகள் ரஜினிசெல்வம், கே.வி.எஸ்.சீனிவாசன், மீனவர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்