வட்டமலை கரை ஓடை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்

வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை ஓடை அணையில் இருந்து நேற்று பாசனத்திற்காக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார்.

Update: 2022-03-09 17:42 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை ஓடை அணையில் இருந்து நேற்று பாசனத்திற்காக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார்.
வட்டமலை கரை ஓடை அணை
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1974-1979-ம் ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் 27 அடி உயரத்தில், 30 கிராமங்களில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடையும் வகையில் அணை கட்டப்பட்டது. அதற்கு பிறகு 3 முறை மட்டுமே பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் வந்தது.
கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் வட்டமலை கரை ஓடை அணை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விடக்கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் திறப்பு
இது தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் திருமூர்த்தி அணையில் இருந்து செல்லும் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் ஷட்டரிலிருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த டிசம்பர் 1-ந் தேதி அணைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தும் மலர் தூவியும் வரவேற்றனர்.
நேற்று காலை அணையிலிருந்து பாசனத்திற்காக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீரை திறந்துவைத்தார். இந்த அணையின் ஆழம் 24.75 அடி ஆகும். தற்போது 19.94 அடி அளவு நீர் உள்ளது. இந்த தண்ணீர் இடது, வலது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் தகுந்த இடைவெளி விட்டு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
சாலை பணி
வெள்ளகோவில் ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சியில் ரூ.17.60 லட்சத்தில் பொன்பரப்பி-கம்பிளியம்பட்டி முதல் வேலூர் சாலை வரையும், ரூ.27 லட்சத்தில் மயில்ரங்கம் சாலை முதல் பாப்பாவலசு வரையும் தார்ச்்சாலை அமைக்க பூமி பூஜையை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
மேலும் வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 57 உழைக்கும் மகளிருக்கு ரூ.14.25 லட்சத்தில் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கான உத்தரவை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், வெள்ளகோவில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், மாணவர் அணி சக்திகுமார், மூலனூர் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் பி.பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகனசெல்வம், நகரசெயலாளர் கே.ஆர்.முத்துக்குமார், நகர துணை செயலாளர் சபரி முருகானந்தன், ஏ.எம்.சி.செல்வராஜ், தாராபுரம் சப்-கலெக்டர் ஆர்.குமரேசன், வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் மு.கனியரசி, துணைத்தலைவர் விஜயலட்சுமி குமரவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் கலையரசி, பி.சந்திரசேகர், சுஜாதா, கோ.சொர்ணாம்பிகை, எஸ்.முத்துலட்சுமி, கே.நளினி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.லோகநாதன், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, செயற்பொறியாளர் (அமராவதி வடிநில கோட்டம்) முருகேசன், இளம் பொறியாளர் கே.நாட்ராயன். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், வட்டமலை கரை ஓடை பாசன விவசாயிகள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் வருவாய் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்