லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:
லாரி தொழிலில் நஷ்டம்
எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 42). விவசாயி. மேலும், தனது தம்பி மணிகண்டன் லாரியின் வரவு, செலவு கணக்குகளை நிர்வகித்து வந்தார். வீரகுமாருக்கு பாரதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீரகுமார் சாப்பிட்டு விட்டு வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகைக்கு தூங்க சென்றார். அதிகாலை 5 மணி அளவில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாரதிக்கு வீரகுமாரின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் அவர் மாட்டுக்கொட்டகைக்கு சென்று வீரகுமாரிடம் விசாரித்தார். அப்போது அவர், லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, விஷம் குடித்ததாக மனைவியிடம் தெரிவித்தார்.
தற்கொலை
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாரதி, 108 ஆம்புலன்ஸ் மூலம் வீரகுமாரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரகுமார் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் வீரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.