போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது ரவுடி உள்பட 2 பேரின் கால்கள் முறிந்தன-பள்ளத்தில் தவறி விழுந்தனர்

சேலத்தில் கைது செய்யப்பட்ட 2 ரவுடிகள், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது பள்ளத்தில் தவறி விழுந்ததில் கால்கள் முறிந்து காயம் அடைந்தனர்.

Update: 2022-03-09 17:42 GMT
சூரமங்கலம்:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி டிரைவர்
சேலம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). லாரி டிரைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அவருடைய வீட்டுக்குள் சேலம் சின்னதிருப்பதி பாரதி நகரை சேர்ந்த பிரபல ரவுடியான சித்தேஸ்வரன் (39), அரவிந்த் (31) உள்பட 4 பேர் புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு தனியாக இருந்த அன்பழகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து சித்தேஸ்வரன் உள்பட 4 பேரும் வீட்டில் இருந்த ரூ.36 ஆயிரத்தை மிரட்டி பறித்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அன்பழகனை காரில் ஏற்றி கன்னங்குறிச்சி மலையடிவாரத்துக்கு கடத்தி சென்றனர்.
பணம், நகை கொடுத்து மீட்பு
அங்கு அவரை தாக்கியதுடன் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டினர். இதையடுத்து அன்பழகன் தனது நண்பரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியதுடன் ரூ.1 லட்சம் கொண்டு வந்து தன்னை மீட்டு செல்லுமாறு தெரிவித்தார். பின்னர் அவர் அன்பழகனின் அக்காளிடம் இதுகுறித்து எடுத்து கூறினார். அதைத்தொடர்ந்து அவர் ரூ.5 ஆயிரம் மற்றும் 2 கிராம் நகை, ஒரு மோதிரம் ஆகியவற்றை கொண்டு சென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு தம்பியை மீட்டார்.
அப்போது அவர்களிடம் இதுபற்றி வெளியே சொன்னால் உங்களை கொன்றுவிடுவோம் என மிரட்டி உள்ளனர். சித்தேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதலில் காயமடைந்த அன்பழகன், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார். அப்போது ஆஸ்பத்திரி தரப்பில் இருந்து இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் சித்தேஸ்வரன், அரவிந்த் உள்பட 4 பேர் சேர்ந்து அன்பழகனை கடத்தி சென்று தாக்கியதுடன் அவரிடம் இருந்து பணம், நகை பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதனிடையே சித்தேஸ்வரன், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் சித்தேஸ்வரன் மீது 2 கொலை உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும், அரவிந்த் மீது 4 வழக்குகளும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரையும் அன்பழகனை கடத்தி சென்ற கன்னங்குறிச்சி மலையடிவாரத்துக்கு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
கால் முறிந்தது
அப்போது சித்தேஸ்வரன், அரவிந்த் ஆகிய இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்தனர். இதில் அவர்கள் 2 பேருக்கும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகள் பள்ளத்தில் தவறிவிழுந்ததில் அவர்களது கால்கள் முறிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்