பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவருக்கு திடீர் நெஞ்சுவலி

பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்ததால் பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2022-03-09 17:35 GMT
பெரியகுளம்: 


பெரியகுளம் நகராட்சி
பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 12 இடங்களையும், அ.தி.மு.க. 8 இடங்களையும், அ.ம.மு.க., சுயேச்சை தலா 3 இடங்களையும், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,    இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தையும் பிடித்தது. 
பெரியகுளம் நகராட்சியில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றியது. இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் சுமிதா தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தலைவராக பதவி ஏற்றார்.

துணைத்தலைவர் பதவி
இந்த நிலையில் பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. இதற்கிடையே 26-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜாமுகமது (வயது 49) துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். 
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.வை சேர்ந்தவரே துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ராஜினாமா நெருக்கடி
இதேபோல் தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 
இதையடுத்து பெரியகுளம் நகராட்சியில் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜாமுகமதுவுக்கு, நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. 

மருத்துவமனையில் அனுமதி
இதனால் மனவேதனை அடைந்த ராஜாமுகமதுவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
உடனடியாக அவரை சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும் செய்திகள்