பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்காலில் முளைத்துள்ள முட்புதர்கள் அகற்றப்படுமா?
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்காலில் முளைத்துள்ள முட்புதர்கள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கரூர்,
பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்கால்
கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. இதில் பஞ்சமாதேவி ஆயக்கட்டு வாய்க்கால் பிரிந்து சோமூர் வரை செல்கிறது. இதனால் சுமார் 800 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து முட்புதர் போல் காட்சி அளிக்கிறது. மேலும், கழிவு நீரும், பிளாஸ்டிக் பொருட்களும் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதில், நெரூர் வாங்கல் பிரிவு சாலையில் உள்ள வாய்க்காலில் ஆகாய தாமரைகள் முளைத்து நீர் செல்ல முடியாத அளவில் மண்டிக் கிடக்கின்றன.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே தற்போது கோடைகாலம் என்பதால் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகள் மற்றும் முட் செடிகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அவற்றை அகற்றினால்தான் தான் வாய்க்காலில் எளிதில் நீர் செல்வதுடன், நிலத்தடி நீர்மட்டம் பெருகவும், விவசாயம் செழிக்கவும் உதவியாக இருக்கும் எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள், விவசாயிகள், எதிர்ப்பார்த்துள்ளனர்.