சஞ்சய் ராவத் குற்றம் சாட்டிய நபர் மீது நடவடிக்கை போலீஸ் கமிஷனருக்கு தொழில் அதிபர் கடிதம்
சஞ்சய் ராவத் குற்றம்சாட்டிய ஜிதேந்திர நவ்லானி மீது நடவடிக்கை எடுக்ககோரி மும்பை போலீஸ் கமிஷனருக்கு புனேவை சேர்ந்த தொழில் அதிபர் கடிதம் அனுப்பி உள்ளார்.
மும்பை,
சஞ்சய் ராவத் குற்றம்சாட்டிய ஜிதேந்திர நவ்லானி மீது நடவடிக்கை எடுக்ககோரி மும்பை போலீஸ் கமிஷனருக்கு புனேவை சேர்ந்த தொழில் அதிபர் கடிதம் அனுப்பி உள்ளார்.
சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய விசாரணை முகமைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜித்தேந்திர நவ்லானி என்பவரின் நிறுவனத்தின் மூலம் மிரட்டி பணம் பறித்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக அமலாக்கத்துறை எந்த நிறுவனத்தில் சோதனை நடத்துகிறார்களோ அந்த நிறுவனத்திடம் இருந்து ஜித்தேந்திர நவ்லானியின் வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் புனேவை சேர்ந்த தொழில் அதிபர் அரவிந்த் போசாலே என்பவர் ஜிந்தேந்திர நவ்லானி மீது மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில் கூறியிருந்ததாவது:-
ரூ.100 கோடி பறிப்பு
ஜித்தேந்திர நவ்லானி முதலில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து அமலாக்கத்துறைக்கு தகவல்களை கொடுப்பார். அந்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைக்கப்படுவார்.
இப்படி அமலாக்கத்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபர்களிடம் ஜிந்தேந்திர நவ்லானி பணம் பறித்து வருகிறார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிப்பதாக கூறி பல அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடியில் ஈடுபட்டனர். இதுவரை 70 நிறுவனங்களிடமிருந்து ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2015-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுவரை ரூ.59 கோடி ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் ஜித்தேந்திர நவ்லானி சுருட்டி உள்ளார். ஆனால் அத்தகைய ஆலோசனை வழங்கும் எந்த கல்வி தகுதியும் அவருக்கு இல்லை.
எனவே ஜித்தேந்திர நவ்லானி மீது வழக்குப்பதிவு செய்து, அவர் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.