ஆர்டிஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பழனியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பழனி:
பழனி அருகே பெரியம்மாபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், தாசில்தார் சசிக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு பெரியம்மாபட்டி பகுதியில் உச்சவரம்பு சட்டத்தின்கீழ் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றை ஏழை மக்களுக்கு அரசு வழங்கியது. இதில் நாங்கள் பயிர் சாகுபடி செய்து வருகிறோம்.
இந்தநிலையில் தனியார் சிலர் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலங்களை ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநில அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டு தர வேண்டும் என்றனர்.
உடனே அதிகாரிகள், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.