ஊட்டி அருகே ரூ 3 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்த கிராம மக்கள்

அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லாதால் ரூ.3 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்த கிராம மக்கள் முன்மாதிரியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Update: 2022-03-09 15:14 GMT
ஊட்டி

அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லாதால் ரூ.3 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்த கிராம மக்கள் முன்மாதிரியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர். 

கிராம மக்கள் கோரிக்கை 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இத்தலார் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊட்டியில் இருந்து இத்தலார் வழியாக எமரால்டு, எடக்காடு, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இந்த கிராமத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. எனவே இங்கு பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கும்போது பெரிதும் அவதியடைந்தனர். மேலும் மழை பெய்யும்போது ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். 

எனவே இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நிழற்குடை அமைத்தனர்

அத்துடன் கலெக்டரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தை நம்பி எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த கிராம மக்கள் தாங்களே தங்கள் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்தனர். 

இதற்காக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி, மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் தாங்களாகவே முழுக்க முழுக்க கண்ணாடி யால் ஆன நிழற்குடையை அமைத்து அதை திறந்தும் உள்ளனர். 

இந்த நிழற்குடைக்குள் 8 இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. இந்த நிழற்குடையை சுற்றிலும் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க கம்பிகளும் வைக்கப்பட்டு உள்ளன. 

ரூ.3 லட்சம் செலவு

மேலும் இந்த நிழற்குடைக்குள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக் கூடாது, போக்குவரத்து சிக்னலை கவனித்து செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்று உள்ளன. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் நிழற்குடை அமைக்க அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் பயனில்லை. இதனால் கலெக்டரை நேரில் பலமுறை சந்தித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனால் நாங்களே நிதி திரட்டி ரூ.3 லட்சத்தில் கண்ணாடியால் ஆன பயணிகள் நிழற்குடையை அமைத்து உள்ளோம். முழுக்க முழுக்க கண்ணாடியால் செய்யப்பட்டது என்பதால் உள்ளே பயணிகள் காத்திருக்கும்போது பஸ்கள் வந்தாலும் உடனடியாக தெரிந்து விடும். மேலும் இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க கண்காணித்தும் வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பாராட்டு 

மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் தங்கள் கிராமத்தில் நிதி திரட்டி நிழற்குடை அமைத்த கிராம மக்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர். இது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். 

மேலும் செய்திகள்