வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
பொய் வழக்கு பதியக்கூடாது
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத் துறையின் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் வன்கொடுமைகள் குறித்த புகார்கள் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதியப்படும் போது வாதி, பிரதிவாதி மீது உரிய விசாரணை செய்து பதிவு செய்ய வேண்டும். பொய் வழக்குகள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நிவாரணம் வழங்க வேண்டும்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க முறையான வகையில் விசாரணை செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிப்படைந்து நிவாரண உதவிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளவரசி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, புகழேந்தி மற்றும் தாசில்தார்கள், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.