தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பற்றிய செய்தி

Update: 2022-03-09 14:33 GMT
வீணாக வெளியேறும் குடிநீர்

வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மிக அருகில் வேளாளர் தெரு உள்ளது. அங்கு சாலையை புதுப்பிக்கும் பணி நடந்தபோது, குடிநீர் குழாய் இணைப்பை பொக்லைன் மூலம் சேதப்படுத்தி விட்டனர். இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது, தினமும் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 10 மணிவரை குடிநீர் வீணாக வெளியேறுகிறது. அந்த இடத்தில் சேறும் சகதியுமாக மாறி விட்டது. அந்த வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரசேதமான குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.
-பேராசியர் ஜி.ரமேஷ்குமார், சத்துவாச்சாரி வேலூர்.

கால்வாய் தூர்வாருவார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் 4&வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர்கால்வாய் 3 மாதமாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புழுக்கள் கால்வாயில் இருந்து மேலே வருகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.மணி, வி.சி.மோட்டூர்.

இரும்பு பாலத்தில் சேதம்

காட்பாடியில் இருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் திருவலம் பொன்னை ஆற்றில் ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. தரையில் சிமெண்டு பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் அச்சப்படுகின்றனர். சேதமான பாலத்தை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.

 தினத்தந்திக்கு நன்றி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் தென்முடியனூர் ரோடு அண்ணாமலை மண்டித்தெருவில் ஒரு சிறுமின் விசை தொட்டி உள்ளது. அதன் அருகில் 3 தெருவின் கால்வாய் கழிவுநீர் அங்கு வந்து தேங்கியிருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவருக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-கே.காளிதாஸ், தண்டராம்பட்டு. 

 கால்வாயில் குப்பைகள் அகற்ற வேண்டும்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்பக்கம் பாலாறு அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பெரிய அளவில் உள்ளதால் அதிகமான கழிவுநீர் அவ்வழியாகச் செல்லும். கால்வாயில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி காணப்படுவதால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கி காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பத்மநாபன், வேலூர்.

 தெருவின் நடுவே மின்கம்பம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். அங்குள்ள ஒரு தெருவின் நடுவ மின்கம்பம் உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி எந்த ஒரு வாகனங்களும் செல்ல வழியில்லை. மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன்குமார், தலையாம்பள்ளம். 

மேலும் செய்திகள்