வேலூர் பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
பொதுமக்கள் அளிக்கும் புகாரை வாங்காமல் அலைக்கழித்த வேலூர் அனைத்து மகளிர் பெண் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
வேலூர்
பொதுமக்கள் அளிக்கும் புகாரை வாங்காமல் அலைக்கழித்த வேலூர் அனைத்து மகளிர் பெண் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
புகார் வாங்காமல் அலைக்கழிப்பு
வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சசி (வயது 45). இவர் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதில்லை என்றும், புகாரை உடனடியாக பெறாமல் அலைக்கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் வேலூரை சேர்ந்த 35 வயது கூலித்தொழிலாளி அவருடைய 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி புகார் அளிக்க சென்றார். அப்போது பணியில் இருந்த ஏட்டு சசி புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் போலீஸ் உயர்அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
அதன்பின்னரே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்து தலைமறைவான தொழிலாளியை 2 நாட்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தாயாரிடம் புகாரை பெறாமல் அலைக்கழித்தது தொடர்பாக விசாரிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஏட்டு சசி சிறுமியின் தாயார் உள்பட பொதுமக்கள் பலரிடம் புகார் வாங்காமல் அலைக்கழித்தது தெரிய வந்தது. அதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.