புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்

மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2022-03-09 13:13 GMT
மன்னார்குடி;
மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வர்த்தகர் சங்க கூட்டம் 
மன்னார்குடி வர்த்தகா் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஏ.பி.அசோகன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். மாநில வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் சு.ஞானசேகரன், மாவட்டத் தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி, மண்டல தலைவர் எல்.செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
நிரந்தர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இடையூறாக வெளியூரிலிருந்து டாடா ஏஸ் வாகனம் மூலமாகவும் நடைபாதைகளிலும் கடை அமைத்து தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு நகராட்சி மற்றும் போலீசார் தடை விதிக்க வேண்டும்.
வரிவிலக்கு
நகராட்சி கடைகளில் வாடகைக்கு வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கு முன் தேதியிட்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதை நகராட்சி நிர்வாகம் திரும்ப பெற வேண்டும்.
கொரோனா காலங்களில் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்த கடைகளுக்கு வாடகை மற்றும் நகராட்சி வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காலத்தில் செயல்படாமல் இருந்த திருமண மண்டபங்களுக்கு விதிக்கப்பட்ட எஸ்.யு.சி மற்றும் கட்டிட வரிகளிலிருந்து நகராட்சி விலக்கு அளிக்க வேண்டும்.
புதிய மாவட்டம்
வணிக பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும். மன்னார்குடியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள சார்பதிவாளர் பதவியை நிரப்ப வேண்டும்.
நகர்ப்புறங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் பாலிதீன் பைகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் பொருளாளர் எஸ்.பிரபாகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்