திருத்தணியில் மரப்பட்டறையில் தீ விபத்து
திருத்தணியில் மரப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி-சித்தூர் சாலையில் மகேந்திரன் என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களான கதவு, ஜன்னல் போன்ற மரத்தினால் ஆன பொருட்களை தயார் செய்யும் மரப்பட்டறையை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மரக்கடை தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்தது.
இதுகுறித்து திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தேக்கு, வேங்கை உள்ளிட்ட மரங்களால் ஆன கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்களும், எந்திரங்களும் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகியது. இது குறித்து மகேந்திரன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.