இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் மருத்துவ குறிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் மருத்துவ குறிப்புகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-09 11:57 GMT
புதுச்சேரி, மார்ச்.9-
இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவர்களின் மருத்துவ குறிப்புகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
இணையதளத்தில் பதிவு
புதுவை சுகாதாரத்துறை சார்பில் தனியார் வங்கி உதவியோடு பள்ளி மாணவர்களின் மருத்துவ விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளன. இதன் தொடக்க விழா கவர்னர் மாளிகையில்  நடந்தது.
விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு இணையதள பதிவினை தொடங்கி வைத்தார்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக...
இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரியில் இந்த இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் மருத்துவ விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். அது இப்போது நடந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி உலகில் 60 முதல் 70 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டால் அவர்கள் வளரும்போது அவற்றை சரிசெய்ய சுகாதார பதிவு உதவியாக இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடு
பெரும்பாலான நோய்களுக்கு தொடக்க நிலையிலேயே ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு சரிசெய்யப்படாததுதான் காரணம். அங்கன்வாடி குழந்தைகள், கல்லூரி மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். மாணவர்களுக்கு கல்வி பதிவேடு பராமரிக்கப்படுவதைப்போல சுகாதார பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் பிரதமர் மோடி ஸ்வச் பாரத் இயக்கம் பற்றி பேசியபோது, முதலில் அது சுத்தம் செய்யும் நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு நோய்த்தொற்று பெருமளவு குறைந்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது.
2.48 லட்சம் குழந்தைகள்
ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய கவனம் செலுத்தினால் குழந்தைகளின் உடல், மனவளர்ச்சிக்கும், கல்வியில் முன்னேற்றத்துக்கும் உதவியாக இருக்கும். எல்லா தரவுகளும் கணினி மயமாக்கப்படுவதை பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து குழந்தைகளின் சுகாதார விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதில் அங்கன்வாடி குழந்தைகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும்.
குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யும்போது தாய்மார்களிடம் இருக்கும் குறைபாடுகளும் கண்டறியப்படும். இந்த திட்டம் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். புதுச்சேரியில் உள்ள 2 லட்சத்து 48 ஆயிரம் குழந்தைகளின் மருத்துவ குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
----_____

மேலும் செய்திகள்