கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்ட திருவிழாவுக்கு கொடி ஏற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 9 மணிக்கு சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 2-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பூத வாகனத்திலும், நாளை (வெள்ளிக்கிழமை) சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அன்ன வாகனத்திலும் உலாவந்து காட்சி அளிப்பர்.
வாகனங்களில் வீதியுலா
நான்காம் திருநாளன்று வெள்ளி யானை வாகனத்திலும், ஐந்தாம் திருநாள் அன்று வெள்ளி மயில் வாகனத்திலும், ஆறாம் திருநாளன்று சோமஸ்கந்தர் காலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா நடைபெறும்.
7-ம் திருநாள் மாலை 4 மணிக்கு சண்முக அர்ச்சனை நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் சிவப்பு மலர் சூடி சிவன் அம்சமாகவும், நள்ளிரவு ஒரு மணிக்கு வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்சமாகவும், மறுநாள் காலை 7 மணிக்கு பச்சை மலர்சூடி திருமாலின் அம்சமாகவும் வீதி உலா நடைபெறுகிறது.
8-ம் திருநாள் இரவு 9 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் கைலாய பர்வத வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தேரோட்டம்
9-ம் திருநாள் காலை 7 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளுகிறார். 10.30 மணிக்கு கோ ரதத்தில் சண்டிகேஸ்வரரும், சட்ட ரதத்தில் விநாயக பெருமானும், வைர தேரில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி தேரோட்டமும் நடைபெறுகிறது.
1-ம் திருநாள் இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியும், தவசு காட்சியும் நடக்கிறது. 11-ம் திருநாள் அன்று இரவு கழுகாசலமூர்த்தி வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 12-ம் திருநாள் அன்று இரவு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. 13-ம் திருநாள் இரவு 7 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.