தமிழகத்தில் மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை

தமிழகத்தில் மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update: 2022-03-09 03:23 GMT
மேட்டூர்:-
தமிழகத்தில் மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேட்டூரில் ஆய்வு
தமிழக மீன் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் மாவட்டத்துக்கு வந்தார். அவர்  மேட்டூர் காவிரி பாலம் அருகே உள்ள மீன் விதை பண்ணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகளின் அளவுகள் குறித்தும், மீன் வளர்ப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை
மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 45 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பில் வைக்கப்படுகிறது. இதனை அதிகரித்து ஒரு கோடியாக இருப்பில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளத்தை அதிகரிக்க நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலும், ஏரி, குளங்களிலும் மீன்குஞ்சுகள் விட்டு புரதச்சத்து நிறைந்த மீன்களை உற்பத்தி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிறைந்த பகுதிகளில் மீன் குஞ்சுகளை விட்டு மீன் வளத்தை பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தொட்டிகள் அமைக்கும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் மீன் பிடிப்பு உரிமம் கேட்டு மனுக்கள் கொடுத்துள்ளனர். தகுதியான நபர்களுக்கு மீன்பிடிப்பு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 1500 பேர் உரிமை பெற்று மேட்டூர் அணையில் மீன்பிடித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு
ஆய்வின் போது தமிழ்நாடு மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை ஆணையாளர் பழனிசாமி, சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 
முன்னதாக மேட்டூர் வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மேட்டூர் நகர மன்ற தலைவர் சந்திரா, துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் வரவேற்றனர்.
ஆடு ஆராய்ச்சி நிலையம்
இதன் பின்னர் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி ஆடு ஆராய்ச்சி நிலையத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் ஆடுகளுக்கு தீவனங்களை வழங்கினார். மேலும் கால்நடை துறை சார்பில் பயனாளிகளுக்கு அமைச்சர் ஆடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சதாசிவம் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாச பெருமாள், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பொட்டனேரி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்