தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேவையற்ற வேகத்தடைகள்
கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு ரவுண்டானா வரையில் 8 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. தற்போது 5 ரோடு ரவுண்டானா அருகில் பெங்களூரு மற்றும் சென்னை சாலை பகுதியிலும் சிக்னல் அருகில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிக்னல் இருப்பதால் அனைத்து வாகனங்களும் நின்று செல்வது வழக்கம். இந்த நிலையில் அங்கு சிக்னல் அருகில் வாகனங்கள் நிற்கும் இடத்திலேயே தேவையின்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே தேவையற்ற வேகத்தடைகளை அகற்றிட வேண்டும்.
-சோனிபிரசாந்த், கிருஷ்ணகிரி.
அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்
பெத்தநாயக்கன்பாளையம் சின்னமசமுத்திரம் ஏரிக்கரை மண் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் இந்த ஏரிக்கரையின் வழியாகதான் சென்று வருகின்றனர். எதிரில் வாகனங்கள் வருகிற போது ஒதுங்கி நிற்பதற்குகூட இடமில்லை. அந்த அளவுக்கு ஏரிக்கரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும்.
-பாரதிதாசன், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நூலகம்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள கிளை நூலகத்தில் 4 பேர் மட்டுமே அமர்ந்து படிக்கும் வகையில் இடம் உள்ளது. இதனால் வாசகர்கள், மாணவர்கள் நின்று கொண்டு படிக்கும் நிலை உள்ளது. எனவே மாணவர்கள், வாசகர்களின் நலன் கருதி நூலகத்தை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
குண்டும், குழியுமான தார்சாலை
பெத்தநாயக்கன்பாளையம் 2-வது வார்டுக்கு செல்லும் தார்சாாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. பல ஆண்டுகளாக இதே நிலை இருக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தார்சாலையை புதுப்பித்து தெருவிளக்கு அமைத்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.
-ஹக்கீம், சின்னமசமுத்திரம், பெத்தநாயக்கன்பாளையம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் 5 ரோட்டில் இருந்து சேலம் ஜங்ஷன் செல்லும் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாக்கடை கால்வாயில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.
சாக்கடை குழிக்கு மூடி வேண்டும்
சேலம் ஸ்டேட் பாங்க் காலனி ரோட்டின் நடுவே உள்ள சாக்கடை கால்வாய்குழி மூடி உடைந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயில் மூடி போட்டு, ரோட்டை சீரமைத்து தர வேண்டும்.
-கேசவராஜ், ஸ்டேட் பாங்க் காலனி, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. ஜக்கப்பன் நகர், தம்மண்ண நகர், சாந்தி நகர், பெரியார் நகர், பழையபேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த தெருநாய்களால் தினமும் பலரும் தெருநாய்கடிக்கு உள்ளாகிறார்கள். மேலும் சாலைகளின் குறுக்கே ஓடி தெருநாய்கள் விபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதில் பலர் காயம் அடைகிறார்கள். இந்த தெருநாய்களை பிடிக்க பல முறை கோரிக்கைகள் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனுப்பிரியா, கிருஷ்ணகிரி.