ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து நகை-பணம் பறித்தவர் கைது
ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 66). இவர் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திண்டலில் இருந்து ஆனைக்கல்பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் மூலப்பாளையம் பூந்துறைரோடு பகுதியில் சென்றபோது அங்கு நின்றிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும், நகைகளை அணிந்து செல்வதற்கு உரிய ஆவணம் வேண்டுமென்றும் கேட்டு மிரட்டி உள்ளார்.
மேலும் குழந்தைவேல் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து குழந்தைவேல் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.
ரூ.1 லட்சம்
இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (73) என்பவர் தனது உறவினரை சந்திப்பதற்காக ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது அவரை வழிமறித்த நபர் ஒருவர் வருமான வரித்துறை அதிகாரி என்று மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றார்.
எழுமாத்தூர் காட்டுவலசு பகுதியை சேர்ந்த மணி (55) என்பவர் நிலக்கடலை வியாபாரியாக உள்ளார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சம் வைத்துக்கொண்டு பூந்துறைரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நபர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.1 லட்சத்தை பறித்து சென்று விட்டார்.
இதுகுறித்து சுப்பிரமணி, மணி ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபரை கைது செய்ய ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேரிடமும் வருமான வரி துறை அதிகாரி போல் நடித்து நகை, பணத்தை பறித்து சென்றதால் இந்த சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
விசாரணையில் 3 பேரிடம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அப்துல் சலீம் (55) என்பவர் நகை-பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த அப்துல் சலீமை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1½ பவுன் நகையும், ரூ.75 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.