டிஜிட்டல் வங்கி அமைப்போருக்கு உதவ மத்திய அரசு தயார் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
டிஜிட்டல் வங்கி தொடங்க முன்வருபவர்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பெங்களூரு:
டிஜிட்டல் நாணயம்
இந்தியா குளோபல் அமைப்பின் ஆண்டு மாநாடு பெங்களூருவில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-
டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்யும் முடிவு ரிசர்வ் வங்கியுடன் மிகுந்த ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி விரும்பும் வகையில் அந்த நாணயத்தை வடிவமைக்க அனுமதி அளித்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு அந்த வங்கியே டிஜிட்டல் நாணயத்தை வெளியிடும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளில் இந்த நாணயம் பயனுள்ளதாக இருக்கும்.
பணப்பரிமாற்றம்
ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரே நேரத்தில் அதிகளவில் பணப்பரிமாற்றம், அரசுகள், வங்கிகள், நிறுவனங்களுக்கு இடையே நடக்கிறது. அவற்றுக்கு இந்த டிஜிட்டல் நாணய பயன்பாடு பலம் கொடுப்பதாக இருக்கும். கிரிப்டோ கரன்சி துறையை ஒழுங்குப்படுத்தவோ அல்லது அதற்கு தடை விதிக்கவோ அரசு விரும்பவில்லை. இதுகுறித்து உரிய ஆலோசனை நடத்திய பிறகு அரசு தனது நிலை குறித்து தெரிவிக்கும்.
இந்த விஷயம் தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் பங்கேற்கலாம். உரிய ஆலோசனைக்கு பிறகு கிரிப்டோ கரன்சி குறித்த பணிகள் முறைப்படி நிறைவு செய்யப்படும். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு எந்த சட்ட நடைமுறைகளையும் மீறாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதனால் தீவிரமான ஆலோசனை தேவைப்படுகிறது. அதன் பிறகு இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்.
பெரிய சவாலான பணி
இந்தியர்கள் பலர் கிரிப்டோ கரன்சியில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். அதனால் அதில் வருவாய் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். மத்திய பட்ஜெட்டில் அமிரித் கால் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அதிகளவில் டிஜிட்டல், தொழில்நுட்ப மயமாக்கப்படும். நமது நாட்டில் ஒவ்வொரு வணிக நிலையிலும் தொழில்நுட்பத்தை புகுத்துவது பெரிய சவாலான பணி.
75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வங்கியை அமைக்க முன்வருபவர்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்தும்
அதே போல் சுகாதாரம் போன்ற அவசர செலவுகளுக்கும் பணம் இல்லாதவர்களாக அவர்கள் இருக்கக்கூடாது. அதனால் உதவிகள் தேவைப்படுவோரின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது அவா்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.