பெங்களூரு:
பெங்களூரு காமாட்சிபாளையா பஸ் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடை முன்பு கடந்த மாதம்(பிப்ரவரி) 24-ந் தேதி ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் பெயர் சதீஷ் என்பதும் அவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை யாரோ தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் சதீசை கொலை செய்ததாக காமாட்சிபாளையாவை சேர்ந்த சதீஷ்(வயது 26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது சம்பவத்தன்று கொலையான சதீஷ் குடிபோதையில் மதுபானக்கடை முன்பு மயங்கி கிடந்துள்ளார். அவர் பையில் இருந்த செல்போனை கைதான சதீஷ் திருட முயன்றுள்ளார். அப்போது கண்விழித்த தொழிலாளி சதீஷ், கைதான சதீசிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், தொழிலாளி சதீசின் கைகளை சட்டையால் கட்டியுள்ளார். பின்னர் அருகே கிடந்த சிமெண்டு கல்லை எடுத்து தொழிலாளி சதீசை, கைதான சதீஷ் அடித்து கொன்றது தெரியவந்தது. பின்னர் செல்போனையும், ரூ.500-யும் எடுத்து கொண்டு கைதான சதீஷ் தப்பி சென்றுள்ளார். கைதான சதீஷ் மீது காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.