மேகதாது திட்டத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது- வீரப்ப மொய்லி

மேகதாது திட்டத்தில் பா.ஜனதா அரசியல் ெசய்கிறது வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு

Update: 2022-03-08 21:42 GMT
சிக்பள்ளாப்பூர்:
மேகதாது திட்டத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது என்று வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

உறுப்பினர்கள் சேர்க்கை

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள் என்பது அனைத்து அரசியல் கட்சிக்கும் தெரியும். இதனால் தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்த 2 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எத்தினஒலே குடிநீர் திட்டத்தை தொடங்கி அதற்காக நிதியும் ஒதுக்கியது. 

காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால்...

ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எத்தினஒலே குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கவனம்  செலுத்தவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், எத்தினஒலே குடிநீர் திட்டம் முடிவடைந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திருக்கும்.

பெங்களூரு நகர மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது திட்டத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது. ஆனால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல் செய்கிறது

இந்த நிலையில், மக்களை திசை திருப்ப கர்நாடக அரசு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடியை ஒதுக்கி உள்ளது. மேகதாது திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது பெரிய விஷயமல்ல. மத்திய அரசிடம் மேகதாது திட்டத்துக்கு கர்நாடக அரசு அனுமதி பெற வேண்டும். அது தான் முக்கியம். 

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் உள்ளதால், மேகதாது திட்டத்துக்கு மாநில அரசு எளிதாக அனுமதி பெற முடியும். ஆனால் மேகதாது திட்டத்தை வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்