தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை
பெரம்பலூர் அருகே கூலித்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த மருவத்தூர் போலீஸ் சரகம் கே.எறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது55). இவர் தனது கரும்புத்தோட்டத்தில் 2007-ம் ஆண்டில் கரும்பு பயிரிட்டிருந்தார். விளைந்த கரும்பு பயிர்களை வெட்டுவதற்காக தனது நண்பர்தங்கராஜ் உதவியுடன் கள்ளக்குறிச்சியை அடுத்த க.அலம்பலம் பகுதியைச்சேர்ந்த சத்யா, அவரது கணவர் முருகேசன், உறவினர்கள் கலியன், மருவாயி, வெங்கடேசன் உள்பட விவசாய கூலித்தொழிலாளர்கள் சிலரை கே.எறையூர் கிராமத்திற்கு அழைத்து வந்து கரும்பு வெட்டுவதற்காக தங்கவைத்தனர்.
மேலும் அதற்காக முன்பணம் ரூ.50ஆயிரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கரும்புகள் காய்ந்ததால் கரும்பு வெட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயி முருகேசனுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடாகி தகராறு ஏற்பட்டது.
கொத்தடிமை
இந்த நிலையில் விவசாயி முருகேசன்மற்றும் அவரது தரப்பைச்சேர்ந்த விஜயகோவிந்தராஜ் என்கிற விஜயகுமார் (40), குமார் (65) ஆகிய 3பேரும் சத்யா, அவரது கணவர் முருகேசன், சத்யாவின் உறவினர்கள் கலியன், மருவாயி, வெங்கசேன் உள்பட 13 பேரை குதிருக்குள் 2 வாரங்கள் அடைத்துவைத்து கொத்தடிமையாக நடத்தி உள்ளனர். மேலும் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து சாதி பெயரை இழிவுபடுத்தும் விதமாக தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டினர்.
இதில் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் தப்பிவந்து போலீசில் நடந்ததை கூறினார். இதனைத்ெதாடர்ந்து சத்யா, கலியன் உள்பட13 கூலித்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சத்யா, மருவத்தூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முருகேசன், விஜயகோவிந்தராஜ், குமார் ஆகிய 3பேர்மீதும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.
இந்த சம்பவத்தை அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள மனோகரன் விசாரணை நடத்தினர்.
சிறை தண்டனை
இந்த வழக்கில் இருதரப்பிலும் விசாரணை செய்யப்பட்டு நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி மலர்விழி, விவசாயி முருகேசனுக்கு 2 ஆண்டு
சிறைதண்டணையும், ரூ.15ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு சிறைதண்டணை அனுபவிக்கவேண்டும் என்றும், விஜயகோவிந்தராஜ் மற்றும் குமார் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைதண்டணையும், ரூ.5ஆயிரம் அபராதமும், இதனை கட்டதவறினால் மேலும் இருவரும் தலா 3 மாதங்களுக்குசிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.