கிணற்றில் பிணமாக மிதந்த பெண் அடையாளம் தெரிந்தது
கிணற்றில் பிணமாக மிதந்த பெண்ணின் அடையாளம் தெரியவந்தது;
பெரம்பலூர்
பெரம்பலூர் டவுன் வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் செல்லமுத்து என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். கிணற்றின் அருகே முட்புதர்கள் அதிகமாக இருந்ததால் அந்த பெண்ணை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் முட்புதர்களை அகற்றி கிணற்றுக்குள் இறங்கி அந்த பெண்ணின் உடலை மீட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தச்சு தொழிலாளி சுரேஷ்குமார் மனைவி அஞ்சலை என்பது தெரியவந்தது. கடந்த 4-ந்தேதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ்குமார், அஞ்சலையை காணவில்லை என புகார் செய்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அஞ்சலை பெரம்பலூர்-எளம்பலூர் சாலை ஆர்.எம்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், அவருக்கு மனநிலை சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் அஞ்சலை கிணற்றை நோக்கி வந்த போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.