பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
சத்தியமங்கலம்
பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற மாரியம்மன்
சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கும் கோவில் இதுவாகும். இந்த விழாவுக்காக தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் குண்டம் விழாவானது, கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
இதனால் இந்த ஆண்டு குண்டம் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சிக்கரசம்பாளையம், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், காளி திம்பம் ஆகிய 5 ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தனித்தனியாக தாரை, தப்பட்டை முழங்க கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் பூஜை பொருட்கள் வைத்த படைக்கலத்தை தன்னுடைய தலையில் சுமந்தவாறு பண்ணாரியை சுற்றி உள்ள சிவன் கோவில், மாரியம்மன் கோவில், சருகு மாரியம்மன் கோவில், ராகு- கேது கோவில், முனியப்பன் சாமி கோவில், வண்டி முனியப்பன் கோவில் மற்றும் அங்குள்ள அனைத்து சாமி கோவில்களுக்கும் சென்று சாமியை வணங்கினார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் ஏராளமான பக்தர்கள் படைசூழ பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
சிறப்பு பூஜை
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து அம்மன் தலை மீது வெள்ளை அரளி மற்றும் சிவப்பு அரளி பூக்கள் வைத்து அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள்,“அம்மா தாயே, பண்ணாரி தாயே, பண்ணாரி சக்தி தாயே விழா நடத்த அனுமதி கொடு” என பக்தி பரசவம் முழங்க பக்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அம்மன் மீது இருந்து வெள்ளை அரளி பூ ஒன்று கீழே விழுந்தது. இதனால் விழா நடத்த அம்மன் உத்தரவு வழங்கிவிட்டதாக கூறி பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர். இதையடுத்து விழா நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்தன.
சப்பரத்தில் வீதி உலா
நேற்று இரவு 11 மணி அளவில் பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலில் இருந்து சப்பரம் சிக்கரசம்பாளையம் அம்மன் கோவிலை சென்றடைந்தது.
இன்று (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் சிக்கரசம்பாளையத்தில் இருந்து அந்த கிராமம் முழுவதும் அம்மனின் சப்பர வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 22-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.