‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் நிழற்குடை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விலக்கு ரோட்டில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் நலன்கருதி இங்கு நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
புதிய பாலம் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கல்லல் ரோட்டின் அருகே உள்ள பாலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் முன் பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புஷ்பராஜ், காளையாா்கோவில்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை 48-வது வார்டு குயர்பாளையம் ரோட்டில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து அருகில் உள்ள தெருக்களில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.
வசந்த், மதுரை.
பராமரிப்பற்ற சாலை
மதுரை சிந்தாமணி வழி கீரைத்துறை சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வழியாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மணி, மதுரை.