தக்கலை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுவன் சாவு
தக்கலை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேபாள சிறுவன்
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ. கிரானைட் தொழில் அதிபர். இவருடைய வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் சிங் (வயது 26) என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். இதில் 2-வது மகன் ரோசன்(3).
நேற்று மதியம் ரமேஷ் சிங்கின் 2-வது மகன் ரோசன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடந்த பிறகு திடீரென சிறுவனை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ரமேஷ் சிங் மற்றும் குடும்பத்தினர் சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடினர்.
தொட்டிக்குள் சிறுவன்
அப்போது, தொழில் அதிபரின் வீட்டில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, சிறுவனை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து ரமேஷ் சிங் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்தாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.